ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 90 ரன்னும், சாய் சுதர்சன் 52 ரன்னும் எடுத்தனர்.
கில் சுதர்சன் இணை முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அசத்தியது. தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் ரஹானே 50 ரன் எடுத்தார்.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் கொல்கத்தா கேப்டன் ரஹானே அளித்த பேட்டில் கூறியதாவது, 199 ரன் சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்று நான் நினைத்தேன். நாங்கள் பந்து வீச்சில் நல்ல கம்பேக் கொடுத்தோம். உங்களுடைய தொடக்க வீரர்களிடம் நல்ல தொடக்கத்தை எதிர்பார்ப்பீர்கள்.
ஆனால், அவர்கள் இத்தொடர் முழுவதுமே தடுமாற்றமாக விளையாடி வருகின்றனர். நாங்கள் வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும். பிட்ச் ஸ்லோவாக இருந்த போதிலும் நாங்கள் பவுலிங் செய்த போது 200-210 ரன்களுக்குள் எதிரணியை மடக்கினால் போதுமானது என்று நினைத்தோம். நாங்கள் மிடில் ஓவரில் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். எங்களுடைய பவுலர்கள் மீது எந்த புகாரும் இல்லை. தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற விஷயங்கள் இருக்கின்றன. ஆம் பீல்டிங் துறையில் 15 20 ரன்களை சேமித்திருந்தால் அது வெற்றியில் பங்காற்றி இருக்கும். இவை அனைத்தும் அணுகுமுறையை பொறுத்தது. எங்களுடைய வீரர்கள் கடினமாக உழைக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நேர்மறையான மனதுடன் தைரியமான பேட்ஸ்மேனாக செயல்பட வேண்டும்.
நீங்கள் அவுட்டாவதைப் பற்றி சிந்தித்தால் அவுட்டாகி விடுவீர்கள். மாறாக எப்படி பவுண்டரி அடிக்கலாம் என்பது போன்றவற்றை சிந்திக்க வேண்டும். எங்களின் தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நான் ஆதரவுக் கொடுக்கிறேன். ஆனால், அவர்கள் தைரியமாக விளையாட வேண்டும். ரகுவன்ஷி பேட்டிங்கில் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.