ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (368 ரன்), மிட்செல் மார்ஷ் (299), மார்க்ரம் (274), ஆயுஷ் பதோனி சூப்பர் பார்மில் இருக்கின்றனர். கேப்டன் ரிஷப் பண்டும் (106ரன்) மிரட்டினால் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கின்றனர்.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (266 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் நம்பிக்கை அளிக்கின்றனர். காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. லக்னோ அணியில் இருந்து பிரிந்த பிறகு அந்த அணிக்கு எதிராக லோகேஷ் ராகுல் களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும்.
இதனால் அவரது பேட்டிங் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.