ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன .
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், டெல்லி அணியிடம்) என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. வெளியூரில் நடந்த 4 ஆட்டங்களிலும் வாகை சூடிய பெங்களூரு அணி சொந்த மண்ணில் (பெங்களூரு மைதானம்) நடந்த 2 ஆட்டங்களிலும் பேட்டிங் தடுமாற்றத்தால் தோல்வியை தழுவியது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானை பந்தாடிய பெங்களூரு அணி உள்ளூரிலும் எழுச்சி காணும் உத்வேகத்துடன் ஆயத்தமாகிறது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (248 ரன்), பில் சால்ட் (208), கேப்டன் ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். டிம் டேவிட், லிவிங்ஸ்டனிடம் இருந்து அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார் பலம் சேர்க்கிறார்கள்.
பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 111 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி, அடுத்து ஆடிய கொல்கத்தாவை 95 ரன்னில் சுருட்டி வியக்க வைத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த ரன்னை இலக்காக நிர்ணயித்து வெற்றியை வசப்படுத்திய அணி என்ற சாதனையை தனதாக்கியது. பஞ்சாப் அணி அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (250 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (216), பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல்லின் பேட்டிங் சூடுபிடிக்கவில்லை. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், வலுசேர்க்கின்றனர்.
5-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடந்த ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக மோதிய இரண்டு ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி,
தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன்
சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல் அல்லது ஸ்டோனிஸ், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், சேவியர் பார்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.