ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் செயல்படவில்லை. இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (கொல்கத்தா, டெல்லி அணிக்கு எதிராக), 4 தோல்வி (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த மும்பை 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2 ஆட்டங்களில் உதை வாங்கிய அந்த அணி முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 205 ரன்கள் குவித்த மும்பை அணி 193 ரன்னில் டெல்லியை ஆல்-அவுட் செய்து வெற்றியை வசப்படுத்தியது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (239 ரன்), திலக் வர்மா (210 ரன்) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். திலக் வர்மா கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் விளாசியுள்ளார். ரையான் ரிக்கெல்டன், நமன் திர் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தடுமாறுகிறார். அவர் 5 ஆட்டங்களில் ஆடி 56 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாகும். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், விக்னேஷ் புத்தூர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் கால்பதித்த சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தி கலக்கினார். காயத்தில் இருந்து திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முந்தைய இரு ஆட்டங்களில் ஆடி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். அவர் பழைய நிலைக்கு திரும்புவதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியும் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. 6 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக), 4 தோல்விகளை (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. வெற்றியோடு தொடங்கிய ஐதராபாத் அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அதுவும் 246 ரன் இலக்கை ஐதராபாத் 9 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமிக்க வைத்தது. அபிஷேக் ஷர்மா (55 பந்தில் 141 ரன்), டிராவிஸ் ஹெட் (66 ரன்) அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஐதராபாத் அணியின் பலமே பேட்டிங் தான். டிராவிஸ் ஹெட் (214 ரன்), அபிஷேக் ஷர்மா (192), இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி என்று தடாலடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் நிலைத்து நின்று விட்டால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான். மாறாக விரைவில் நடையை கட்டினால் அது எதிரணிக்கு கொண்டாட்டமாக மாறிவிடும். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி நம்பிக்கை அளிக்கிறார்கள். இருப்பினும் பந்து வீச்சில் கணிசமாக ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணிகள் களம் காண்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரோகித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ் அல்லது கார்பின் பாஷ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா அல்லது விக்னேஷ் புத்தூர்.
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக்
ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா அல்லது வியான் முல்டெர்.