மட்டக்களப்பில் நான்கு சபைகளுக்கான 3657 காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அஞ்சல் திணைக்கள அதிகாரியிடம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
ஆரம்ப கட்டமாக மண்முனை மேற்கு, ஏறாவூர் நகர், மண்முனை தென் எருவில்பற்று, கோறளைப்பற்று மேற்கு ஆகிய சபைகளுக்கான காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற அதிகார சபை தேர்தல் மே மாதம் 06 திகதி இடம் பெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 11554 உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அஞ்சல் வாக்கு அடையாளம் இடும் தினங்களாக 22/04/2025 ஆம் திகதி மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பொலிஸ், விசேட அதிரடிப்படை, பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவுகளிலும் 23, 24/04/2025 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள், முப்படைகளிலும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்கு தவறிய அரச உத்தியோகத்தர்கள் 28, 29/04/2025 ஆகிய தினங்களில் தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் உள்ளிட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.