இந்த நாட்டிலே தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்துள்ளது. இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க பொய் சொல்லி ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றி பெற்றுள்ளனர். மீண்டும் பொய் கூறி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற இருக்கிறார்கள்.
எனவே மக்கள் கவனமாகவும், நிதானமாகவும் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், நானாட்டான் பிரதேச சபையின் வேட்பாளருமான என்.எம்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (7) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்த விடயம் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்தின் ஊடாக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த ஒரு விடயமாக காணப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த நாட்டு மக்கள் அனைவரும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். அந்த வகையிலே எங்களுக்கும் தோன்றியது அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று.எனினும் நாங்கள் வேறு கட்சி சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு வாக்களிக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் தற்போது தலையிலே கையை வைத்து கவலைப்படுகின்றனர். அவருக்கு ஏன் வாக்களித்தோம்? அவர் சொன்னது எதையும் செய்யவில்லை. இதனால் மக்கள் தற்போது திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் இருந்த பொருட்களின் விலையை பார்க்க தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்துள்ளது. மக்கள் இத் தேர்தலில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க பொய் சொல்லி ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றி பெற்றுள்ளனர். மீண்டும் பொய் கூறி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற இருக்கிறார்கள். எனவே மக்கள் கவனமாகவும், நிதானமாகவும் வாக்களிக்க வேண்டும்.
எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் வேட்பாளர்களை களம் இறக்கி போட்டி போடுகிறோம்.
சில அரசியல்வாதிகள் 30 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். ஒரு விடயங்களுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத அரசியல் வாதிகளே இந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள். எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் என அவர் தெரிவித்தார்.
இதன் போது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய திலீப் லொக்கு பண்டாரவும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
