ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்ரீ பவானந்தராஜா ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை ஜே.வி.பி கட்சியின் தலைமை கண்டு கொள்ளாது என தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டோர் ஏன் நீதிமன்றத்தை நாடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் பொதுமகன் ஒருவரின் 52 ஏக்கர் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து 52 வது படை பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
திரு. ஸ்ரீ பவானந்தராஜா வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருந்த 2012 ஆம் ஆண்டு தை மாதம் இந்த நிலம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்திற்குள் நுழைந்து, நிலங்களை ஆக்கிரமித்து விட்டு உரிமையாளர்களுக்கு புலனாய்வு பிரிவினர் மூலம் அச்சுறுத்தல் விடுத்தனர்.
பொலிஸ் நிலையங்களுக்கு உரிமையாளர்களை அழைத்து சிங்கள படிவங்களில் கையெழுத்து வாங்கி நெருக்கடிகளுக்குள் தள்ளினர்.
இதற்கெதிராக போராடிய பொது மக்கள் பிரதிநிதிகள் மீதும் தாக்குதலும் நடத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் துன்புறுத்தலுக்கு பயந்து காணி உரிமையாளர்கள் தலைமறைவாக வாழ வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.
இந்த அவலங்களுக்கு மத்தியில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நியாயத்தை பெற்று கொள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான Mrs Maheswary Thambirajah மேன்முறையீட்டு நீதிமன்றில் (CoA) வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்றில் “பொது நோக்கத்திற்காக- Public purpose’’ நிலங்களைக் கையகப்படுத்தியதாக அரசாங்கம் வாதிட்டது. .
அதாவது இராணுவத்தினரின் அத்துமீறிய காணி அபகரிப்பை நீதிமன்றில் நியாயப்படுத்தினார்கள்.
Mrs Maheswary Thambirajah அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி Section 2 of the Land Acquisition Act கீழ் ஆக்கிரமிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி வாதாடினார்.
நீதிமன்றில் (CoA) தீர்ப்பு வழங்கிய நீதிபதி Mahinda Samayawardhena இது “தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒரு விஷயம், இது வெளிப்படையாக விவாதிக்கப்படவும் விசாரிக்கப்படவும் தேவையில்லை” என குறிப்பிட்டார்
இது போதாதென்று தனியார் காணிகளில் தென்னை நட்டு வளர்ப்பதை விட தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என வழக்காளியை நீதிபதி எள்ளிநகையாடினார்.
அதாவது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதன் விளைவாக இன்று வரை குறிப்பிட்ட நிலப்பரப்பில் இராணுவம் நிரந்தர கட்டமைப்புகளுடன் ஆக்கிரமித்து நிற்கின்றது
திரு. ஸ்ரீ பவானந்தராஜா யாழ்ப்பாண வைத்தியலையில் நீண்டகாலம் பணியாற்றியிருந்த நிலையில் இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடர்பான இலங்கை நீதிமன்றங்களின் நிலைப்பாடுகள் தெரியாமலிருக்க வாய்ப்புகளில்லை.
ஆனால் இந்த உண்மைகளை மறைத்து விட்டு திரு. ஸ்ரீ பவானந்தராஜா காணி அபகரிப்புக்கு எதிராக ஏன் நீதிமன்றம் போக முடியாது என கேட்கின்றார்.
குறிப்பாக திரு. ஸ்ரீ பவானந்தராஜாவிற்கு நீதிமன்றங்கள் சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை-தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்த மறுப்பதால்தான் அந்த கட்டமைப்புகள் மீது தமிழர்களுக்கு நம்பிகையில்லை என்பது தெரியாமல் இருக்க முடியாது.
இருப்பினும் தன்னுடைய இயலாமையை மறைத்து வெறும் கதை பேச முயற்சிக்கின்றார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திரு. ஸ்ரீ பவானந்தராஜா தான் பிரதிநித்துவம் செய்யும் மக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்று கொள்ளாது என தெரிவிக்க வெட்கப்பட வேண்டும்.
உண்மையில் ஆளும் கட்சியை நியப்படுத்தி பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்ததை விட திரு. ஸ்ரீ பவானந்தராஜா எதையும் பொதுமக்களுக்கு பெற்று கொடுக்கும் நிலையில்லை.
யாழ்ப்பாணம் வரும் ஆளும் கட்சியின் சிங்கள பிரமுகர்களுக்கு பின்னால் கை கட்டி அடியாள் சேவகம் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை.
சொந்த நலன்களுக்காக தங்கள் சமூகத்தையே காட்டி கொடுக்க படித்த (?) மனிதர்களே முயற்சி செய்வதை எப்படி புரிந்து கொள்ளுவது என தெரியவில்லை.
விசேடமாக ஜே.வி.பியில் திரு ஸ்ரீ பவானந்தராஜா போன்றோரை தெரிவு செய்து மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என வாக்கு கேட்ட படித்த (?) யாழ்ப்பாண பெருமக்களின் சத்தத்தையே காணவில்லை.