இம் முறை இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கான பாதுகாப்பை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என திருகோணமலை சோலையடி கிராமத்தை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளர் திருமதி சிசோ குமார் விஜிதா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் (30) இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெண்கள் அரசியலுக்குள் வர வேண்டும் என தத்தளித்தாலும் அவர்களுக்கான பயிற்சிகள் கிராமப் புறம் தொடக்கம் கொழும்பு வரை நடைபெறுகிறது. சில கட்சிகள் சரியான அங்கீகாரம் பெண்களுக்கு வழங்குவதில்லை இதன் காரணமாக சுயேட்சை குழு மூலமாகவும் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆண்கள் அரசியலில் இறங்கினால் தனது காணியை அடகு வைத்தாவது ஈடுபடலாம் ஆனால் பெண்களின் பொருளாதார நிலை காரணமாக அரசியலில் இறங்க முடியாத நிலை காணப்படுகிறது.
மேலும் பெண்களுக்கான பாதுகாப்பை தேர்தல் ஆணையாளர் விசேடமாக இம் முறை அறிவிக்க வேண்டும். அரசியலுக்கு முன்வந்து இறங்கிய போதும் சில வேளையில் புகைப்படங்களை இட்டு வேறு வகையில் சம்பவங்களை நிகழச் செய்கின்றனர். ஆனால் பொலிஸ் பிரிவில் பெண்களுக்கான அமைப்பு இருக்கிறதா? நாங்கள் முறைப்பாடளித்தால் உடனே வருவார்களா? தீர்வினை தருவார்களா? இல்லை நாளை அல்லது அதன் பின்பே வருவார்கள் எனவே தான் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் இலங்கையை பொறுத்தமட்டில் பெண்கள் தொகையில் 52 வீதமானவர்கள் இருக்கிறார்கள் ஆனால் தேர்தலின் போது பெண்கள் பெண்களுக்கு வாக்களிப்பதில்லை எனவே தான் அரசியலுக்காக பெண்களுக்கு எவ்வளவோ விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கினாலும் பெண் பிரதிநிதித்துவம் என்பது குறைவாகவே உள்ளது என்றார்.
