“படையினர் பெற்றுத் தந்த வெற்றியை நாம் மறக்கவில்லை. எனவே, உள்ளகப் பொறிமுறை ஊடாகவேனும் எமது இராணுவத்தைத் தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம். பிரிட்டனின் அறிவிப்பு எதிராக கொழும்பில் நாளை திங்கட்கிழமை போராட்டம் இடம்பெறவுள்ளது.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“இனப் படு கொலை நடந்தது என்றும், படையினர் 40 ஆயிரம் பேரைக் கொலை செய்தனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு படையினர் சட்டத்தக்குப் புறம்பாக 40 ஆயிரம் பேரைக் கொலை செய்தனர் என்றால் பெயர்ப் பட்டியல் எங்கே? வெளிநாடுகளில் உள்ளவர்களின் போலியான சாட்சியங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதில் பயனில்லை.
இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளிடமிருந்து 2 இலட்சத்து 97 ஆயிரத்து 853 பேரைப் படையினர் மீட்டனர். இது தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்ளது. ஆனால், ஆதாரம் இல்லாத 40 ஆயிரம் பற்றியே கதைக்கின்றனர். எனவே, இந்தப் பழிவாங்கலை சர்வதேசம் நிறுத்த வேண்டும்.” – என்றார்.