தன்முனைக் கவிதைக்கு வயது எட்டு. ஆம்! கவிச்சசுடர், பேராசிரியர் திரு கா. ந. கல்யாணசுந்தரம் அவர்களால் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கவிதை வடிவம் தன்முனைக் கவிதை.
எட்டு ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புக்கள் வெளிவந்த நிலையில் மேலும் ஒரு தொகுப்பு வெளிவந்துள்ளது. கடந்த 23 .03 .2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா இலண்டனில் கவிஞர் அப்புத்துரை ஜெகன் எழுதி வெளியிட்ட ” பனி மூடிய புல்வெளி ” என்னும் தன்முனைக் கவிதை தொகுதி வெளியிடப்பட்டது. பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தன்முனைக் கவிதைத் தொகுப்பு நூலும் இதுவாகும்.
விழாவானது மாலை 6.30 மணியளவில் மங்கல விளக்கேற்றி தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. கவிஞர் திருமதி. அஞ்சு ராமதாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க கவிஞர் திருமதி. சுகுணா சுதாகரன் வந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து திரு மகாலிங்கம் கமலஹசன் தலைமையுரை ஆற்றும் போது, கவிதைகளின் வளர்ச்சிப்போக்கில் இன்று தன்முனைக் கவிதைகளின் வளர்ச்சி பற்றிய சுருக்கமான உரையைத் தந்தார். திரு. சின்னத்துரை சிவகுமார் அறிமுகவுரையை நிகழ்த்துகையில் தனக்குத் தெரிந்த கவிஞர் ஜெகனை கிராமத்தின் கலை இலக்கிய மன்றத்தில் இருந்து இன்று வரை அறிமுகம் செய்தார்.
புத்தகத்தின் உள்ளாய்வினை கவிஞர் திருமதி. திருமகள் சீறிபத்மநாதன் ( சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அமெரிக்க முத்தமிழ்ப் பேரவை ) நிகழ்த்தியதோடு. பல கவிதைகளை தனது ஆய்வுக்கு எடுத்துக்காட்டாக முன் வைத்து தன்முனைக் கவிதைகள் எழுதும் வரைவிலக்கணத்தையும் விளக்கினார். வாழ்த்துரையை திருமதி. சர்மினி ரூபாகரன், திருமதி தயாளினி ராஜ்மோகன் ஆகியோர் நிகழ்த்த திரு. திருநாவுக்கரசு ரவிச்சந்திரன் கவிஞர் ஜெகனின் பாடசாலை நாட்களை நினைவு கூர்ந்தார்.
தொடர்ச்சியாக திருமதி. மாலா ஜெகன் நூலை வெளியிட ஈகைக் குழுமம் சார்பில் திரு ஜெயந்திதாஸ், திரு ராமதாஸ் இணைந்து பெற்றுக்கொண்டனர். கவிஞர் அப்புத்துரை ஜெகனின் ஏற்புரையோடு திரு. நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து இராப்போசன விருந்துடன் இரவு 9.30 மணியளவில் நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவெய்தியது.
விழா ஏற்பாட்டாளர்களாக இருந்து இவ்விழாவை மிகச் சிறப்பான முறையில் நடத்திய பெருமை திருமதி. தயாளினி ராஜ்மோகன், திருமதி. சர்மினி ரூபாகரன், திரு. நாகரத்தினம் புஸ்பநாதன் ஆகியோரையே சாரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.








