பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த சமகால நிலைப்பாடுகள் மற்றும் பெண்களின் நிலைபேறான வாழ்வாதாரம் குறித்த கற்றல் மற்றும் சிபாரிசுகள் தொடர்பான திறந்த வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை உப்புவெளி பட்டினமும் சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வினை விழுது நிறுவனம் மற்றும் GIZ ஆகியன இணைந்து இன்று (26) ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பெண்கள் வாழ்வாதார ரீதியான முன்னேற்றத்தை இணங்கண்டு கொண்டு தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் தொடர்பிலும் பெண்கள் அரசியல் தளத்தில் பிரவேசிக்கக் கூடியவர்களாக தங்களது அறிவு திறன் மனப்பாங்குகளை கொண்டு எதிர்காலத்தில் வலுச்சேர்த்தல் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வளவாளர்களால் தெளிவூட்டலும் இடம் பெற்றது.
பொருளாதார ரீதியாக பெண்களை வலுப்படுத்தவும் அரசியலில் பெண் பிரதிநிதித்துவ முறை உள்வாங்கி அதன் மூலமும் அரசியல் உரிமைகளை தாங்களும் அனுபவிக்கக் கூடிய வழிவகைகளை செய்வது தொடர்பாகவும் மேலும் குறித்த வளவாளர்களால் தெளிவூட்டப்பட்டிருந்தது.
பெண் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தி சுயமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை கண்டு கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.
குறித்த நிகழ்வில் வளவாளர்களாக திருமதி நளினி ரத்தினராஜன், சட்டத்தரணி முகுந்தன் உட்பட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு பல தெளிவூட்டல்களை துறைசார் தொடர்பில் வழங்கியிருந்தனர்.
இதில் விழுது நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட திட்ட இணைப்பாளர் திருமதி இதயராணி சித்திரவேல் உட்பட பெண் சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



