இராணுவத்தின் 542 ஆவது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இராணுவத்தின் 542 வது பிரிவு அதிகாரி மேஜர் விக்டர் பெர்னாண்டோ மற்றும் பிரிகேடியர் சந்திக்க அசுருசிங்க அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலாச்சார நடனப் போட்டியில் 12 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவர்கள் முதலாம் இடத்தையும், மன்னார் டிலாசால் கல்லூரி நானாட்டான் மாணவிகள் இரண்டாம் இடத்தையும் திருக்கேதீஸ்வரம் மன்னார் கௌரியம்பாள் தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
முதல் மூன்று இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவிகள் விருந்தினர்களால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் இரண்டு சிங்கள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளும் பங்கேற்று கலாச்சார நடனத்தினை வழங்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ஐ. பி ஜயசிங்க. நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வை.சந்திரபால மேஜர் சிறீநாத் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.














