மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான பேரருட் திரு. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை, மற்றும் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பல நூற்றுக்கணக்கான அருட்தந்யைர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண ஆளுநர், நீதிபதிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதி நிதிகள், இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள் உள்ளடங்களாக பல ஆயிரக்கணக்கான மக்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது ஆயராக மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட் திரு. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயராக உள்ள மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை 9.30 மணியளவில் மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








