கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன், பின்னர் அந்த பெண் துப்பாக்கியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி, வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தை வெட்டி, மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன, நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, வெளியேற முயன்ற போது, அவருக்கு அருகில் சென்று அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ தொடர்பான விசாரணைகளில் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கொழும்பு தலைமை நீதிமன்ற பதிவாளருக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (19) உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வழங்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
சஞ்சீவ உயிரிழப்பு தொடர்பாக வாழைத்தோட்ட பொலிஸார் தாக்கல் செய்த பி அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த பி அறிக்கையை வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சுஜித் பிரியந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சம்பவம் குறித்து புகாரளித்த பொலிஸ் அதிகாரிகள், அந்த நேரத்திலேயே விரிவான விசாரணை தொடங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.