சர்வதேச நாணய நிதியம் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
நாட்டில் 7 சதாப்தகால பயணம் சரி என்பதை அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுள்ளார் என்பதையே பாதீட்டு முன்மொழிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்று பொருளாதார நிபுணரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டத்தை அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்பது போல்தான் நிலைமை உள்ளது.
இதுவரை காலமும் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை தோல்வி என்று கூறிவந்த ஜே.வி.பியின் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் நெறிமுறைகளுக்கு அமையச் செயற்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தில் திருத்தம் செய்து அதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். தனியார் மயமாக்கல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, நாடு புதிய திசையை நோக்கிச் செல்லவில்லை. 77 வருட கால பயணம் சரி என்பதை ஜனாதிபதி அநுரகுமார ஏற்றுள்ளார்.” – என்றார் கபீர் ஹாசீம்.