அறுவடை முடிவடையும் நிலை எட்டியுள்ள நிலையிலும் இதுவரையில் நெல்லுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் என்றும் இல்லாதவாறு கடுமையான நோய் தாக்கம் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் ஏக்கருக்கு 10 மூடைகளுக்கு உட்பட்டே அறுவடையினையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லின் மூலம் தமது செலவீனத்தைக் கூடபெற முடியாத நிலையில் நெல்லினை இடைத்தரகர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் ஆகிய நாம் தள்ளப்பட்டுள்ளது பெரும் வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர்.
எமது உழைப்பால் அறுவடை செய்த நெல்லினை எம்மால் விலை தீர்மானிக்க முடியாத நிலையில் கேட்கும் விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக அறுவடை முடிவதற்கு ஓர் இரு வாரங்களே உள்ளது. தற்பொழுது மழையிலும் வெயிலிலும் நனைந்து மிகுதியாக உள்ள வயல்களில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் உலர விட்ட போதிலும் தேறிய முழுமையான நெல்மணிகளாக காண முடியாத நிலையில் உள்ளது. இந்நிலை தொடருமாயின் அடுத்து வர இருக்கும் சிறு போக நெற்செய்கையிக்கு விதைப்புக்கான நெல்லிணை பெற முடியாத நிலை ஏற்படக்கூடும் என மேலும் தெரிவித்தனர்.
அத்துடன், ஒவ்வொரு வருடமும் தமது அறுவடையின் போது விதைப்புக்கென தரமான நெல்லினை தெரிவு செய்து பாதுகாப்பாக எடுத்து வைத்த பின்னரே நெல்லினை விற்பனை செய்வது வழக்கம் கடந்த வருடமும் சரி இவ்வருடமும் சரி அந்த நிலை அற்றுப் போய் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் எமக்கான விதை நெல் மற்றும் மானிய உரங்கள் மற்றும் எமக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.