சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ்த் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மிக நீண்ட காலமாகத் தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த, மாவை சேனாதிராஜா என்ற தமிழ்த் தேசிய வாகனம் நின்று விட்ட சம்பவம் இன்று நிகழ்ந்தே விட்டது. பல உணர்வு மிக்க தரிப்பிடங்களையும், கடவைகளையும், தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களுடன் நான் கடந்து வந்துள்ளேன். இதிலேயே அண்ணன் மாவையுடன் மிக நீண்ட காலமாக நான் பயணித்தும் உள்ளேன்.
இன்றைய இந்தச் சோகத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியாக நாம் பங்குகொள்கின்றோம். எங்கள் அனுதாபங்களை அவரை இழந்து வாடும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவரது கட்சிக்கும், மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.