யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அர்ச்சுனா எம்.பி. நேற்று இரவு அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன்போது,போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கோரியுள்ளனர்.
பின்னர், அர்ச்சுனா எம்.பி. ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அர்ச்சுனா எம்.பியைக் கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.