”எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தொடர்ந்து ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் காணப்படுகின்றன. மஹிந்த ராஜபக்ஷ காலம் தொடக்கம் இன்றுவரை அது நீண்டுகொண்டே இருக்கின்றது.
நல்லாட்சி என்று வந்த நாசமாய் போன ஆட்சியிலும் அரசியல் கைதிகளுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொடுக்காதவர்கள், ரணில் விக்கிரமசிங்க எதையோ வெட்டி வீழ்த்தப்போகின்றார் என்று ஆதரவு கொடுத்தவர்கள், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் என எல்லோருமே அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வேதனைக்குரிய விடயம்.
இலங்கை வரலாற்றில் ஆயுதப் புரட்சியை ஏற்படுத்திய ஜே.வி.பியினருக்கு இரு தடைவைகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதனால்தான் இன்று அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்றார்கள்.
ஆகவே, இவ்வாறு ஆயுதப் புரட்சியை நடத்தி அதில் விடுதலை பெற்றவர்கள் இன்று ஆட்சிப்பீடத்தில் இருக்கின்றபோது, தமிழ் இளைஞர்கள் மாத்திரம் பயங்கரவாதிகளாக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
நாட்டின் தற்போதைய நீதி அமைச்சர், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்ற கருத்து மிகவும் மோசமானது. தமிழ் அரசியல் கைதிகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை விதிக்கப்படாதவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய முடியும்.
அரசு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்குத் தயங்குகின்றது. சிங்கள மக்கள் கொந்தளிப்பார்கள் எனப் பயப்படுகின்றது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் , வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஆகவே, இந்த ஆட்சியாளர்கள் கையெழுத்துப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், பரந்துபட்ட போராட்டத்துக்கான அறைகூவலை நான் விடுக்கின்றேன்.” – என்றார்.