தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறி வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை, ஐயன்கோயிலடி, பெரியகுளம், ஊரியான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 371 பேரும், ஐயன்கோயிலடி பாடசாலையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும், ஊரியான் பகுதியில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 190 பேரும், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 31பேரும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 245 குடும்பங்களைச் சேர்ந்த 660 பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகம் ஊடாக ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.