2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களைக் கோருவதற்கும் வழிசெய்யும் விதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின்படி, 2023 மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படும்.
அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பில் வைப்பிலிடப்பட்ட கட்டுப்பணத்தையும் மீளச் செலுத்தவும் இந்தச் சட்டமூலம் வழிவகை செய்கின்றது. அதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் திகதியைத் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும், குறித்த திகதி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைப்பட்ட நாளாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.