சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 62 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை தாக்கிய நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
எனினும் நிலநடுக்கம் 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் நேபாள சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திபெத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரான ஷிகாட்சேயில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சீன அமெரிக்க கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஷிகாட்சோவை சுற்றியுள்ள டிங்கிரி கவுண்டியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மூன்று நகரங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.
அதேவேளை நிலநடுக்கத்தின் அதிர்வுகளை இந்தியாவின் சில பகுதிகளில் உணரமுடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனர்த்தத்தை அடுத்து திபெத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.