கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியின் பத்தாம் மைல்கல் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்திருந்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் காரணமாக எந்தவித பாதுகாப்பு சமைக்கைகளோ, மின்விளக்குகளோ பொருத்தப்படாமல் இருந்ததன் காரணமாகவும் கடந்த 31 ஆம் திகதி இடம் பெற்ற வீதி விபத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அதனை அடுத்து 03.01.2025 அன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளதுடன் வீதி சமைக்கைகளும் பாதுகாப்பு குறிகாட்டிகளும் பொருத்தப்பட்டு தற்பொழுது ஓரளவில் மக்கள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் பாதுகாப்பு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருந்தால் இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருப்பதை தவிர்த்து இருக்க முடியும். இரண்டு உயிர்கள் இழப்பதற்கு ஒருவகையில் இப்பாலத்தின் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்களும் காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.