வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று (4) அதிகாலை 1 மணியளவில் மூன்று உந்துருளிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இரண்டு பேர் இலக்கானதாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் வெலிகம வலான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கப்பரதோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.