மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்தார்.
தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் செலுத்தத் தவறியமைக்காக அவருக்கு தலா 05 மாதங்கள் வீதம் 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு எதிராக மேலும் 06 வழக்குகள் தீர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்தன்று ஒருவர் மரணித்தார்.
தற்போது காயமடைந்தவர்களில் 7 பேர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.