கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் 30.12.2024 கிளிநொச்சியில் தமது மாதாந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னேடுத்திருந்தனர்.
கடந்த யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டு தரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அவர்கள் தெரிவிக்கையில்,
தமது பிள்ளைகளை ஒப்படைத்து, 28071 நாட்களாக தமது உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஒவ்வொரு தேர்தல்கள் வரும் போதும் புதிதாக வருகின்ற நாட்டின் தலைவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வினை பெற்று தருவதாக கூறி வருகின்றனர். பின்னர், எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.
அதே போன்று தற்போது நாட்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வினை பெற்று தருவதாகவும், காணாமல் போன உறவுகளின் வேதனைகளும் வலிகளும் தமக்குத் தெரியும். எனவே இது தொடர்பாக உரிய தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியிருந்தார். இருப்பினும் தற்பொழுது ஜனாதிபதி இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எவரிடமும் இது தொடர்பாக கதைக்கப்படவில்லை எனவே முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று இவரும் செயல்படுவாரா? என தமக்கு அச்சம் எழுந்துள்ளது என தெரிவித்தனர்.