தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. தற்போது இதன் மைய அமுக்கம் 1004 மில்லி பார் ஆக உள்ளது. இது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் வடக்கு மற்றும் தமிழக கடற்பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையின்படி இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது அதனை விட தீவிரமாக மாறி எதிர்வரும் 18ம் திகதி அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் மகாபலிபுரம் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ( இதில் மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்).
இத்தாழ்வுநிலை காரணமாக இன்று (15) பிற்பகல் முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது (இன்றும் நாளையும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்). இன்று தொடக்கம் 18ம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 17, 18 மற்றும் 19ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் குளங்கள் மீண்டும் வான் பாயக்கூடும். இது இவ்வாண்டு வடகீழ் பருவக்காற்று காலத்தில் குளங்கள் வான் பாய்கின்ற மூன்றாவது சந்தர்ப்பமாக அமையக்கூடும்.
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மேற்குறிப்பிட்ட காலங்களில் கிடைக்கவுள்ள கன மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் இன்று பிற்பகல் முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை எதிர்வரும் 17 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தின் ஊடாக கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடலில் காணப்படுவதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு கிடைத்த கன மழை இன்றும் சற்று மிதமான அளவில் சில பகுதிகளுக்கு மட்டும் கிடைக்கும்.
அதேவேளை எதிர்வரும் 20ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா அச்சே மாநிலத்திற்கு மேற்காக மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.