இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறும் சுருக்குவலை, இழுவை மடி தொழில் உட்பட இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுதக் கோரியும், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரியும், மீனவருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறு அமைக்கப்பட்ட அமைக்கப்படவுள்ள காற்றாலைகளை நிறுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை 8:45 மணியளவில் போராட்டமொன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் முன்பதாக ஆரம்பமாகி பிரதேச சபை மண்டபம் வரை சென்று அங்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் முதல் நிகழ்வாக மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மதத்த தலைவர்களின் ஆசி உரைகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து கடற்றொழிலிற்கு சென்று மரணமடைந்த மீனவர்களுக்காகவும் சுடர் ஏற்றி நினைவேந்தல் செய்யப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவரும், பன்னாட்டு மீனவர் அமைப்புச் செயலாளருமான w. கேர்மன் குமார தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன், முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் ஜோசப் பிரான்சிஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விமுத்தி பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், பிரஜா அபிலாசா அமைப்பு பிரதிநிதிகள், வட மாகாண பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த மீனவ அமைப்புக்கள், மீனவ பெண்கள் அமைப்புக்கள் கடற்படை அதிகாரிகள், கடற்றொழில், நீரியல் வளத்துறை அதிகாரிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.