மன்னார் – தோட்டவெளி அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவியான அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பல தடைகளைக் கடந்து ஈட்டி எறிதலில் தேசிய ரீதியில் தங்கத்தை சுவீகரித்து ஒட்டுமொத்த வன்னி மண்ணுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யதுர்சிகாவின் சாதனைப் பயணமானது தொடர்ந்து ஆசிய மற்றும், சர்வதேச ரீதியிலும் வியாபிக்கவேண்டுமென ரவிகரன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மட்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில், மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 37.37மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இந் நிலையில் சாதனை மங்கை யதுர்சிகாவிற்கான தனது வாழ்த்துச் செய்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
சாதனைப் பெண் யதுர்சிகாவினால் ஒட்டுமொத்த வன்னிமண்ணும் பெருமையடைகின்றது.
பலத்த தடைகளையும் சோதனைகளையும், வேதனைகளையும் கடந்தே யதுர்சிகா இந்த சாதனையைப் படைத்திருக்கின்றார்.
யதுர்சிகா கல்வி கற்கின்ற தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் விளையாட்டு மைதானம் இல்லை என்று சொல்லப்படுகின்றது. அதேவேளை பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் விபத்தொன்றில் சிக்கி அவர் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்.
இவ்வாறாக பல சோதனைகளையும், வேதனைகளையும், தடைகளையும் கடந்துதான் யதுர்சிகா இந்த சாதனையைப் படைத்திருக்கின்றார்.
அந்தவகையில் யதுர்சிகா சாதிக்கத் துடிக்கின்ற அனைத்து இளையோருக்குமான ஒரு முன்னுதாரணமாக அமைகின்றார்.
அவர் தேசியத்தைத் தொடர்ந்து இனி ஆசிய, சர்வதேச மட்டங்களிலும் சாதனை படைக்க வேண்டும். யதுர்சிகாவின் சாதனைப் பயணம் தொடரட்டும். அவரின் இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.