முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரை தாக்கி வைத்தியசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், காயமடைந்த இளைஞனை மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு தாமதிப்பதாக கூறி காயமடைந்த இளைஞனின் நண்பர்கள் சிலர் அங்கிருந்த வைத்தியர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, காயமடைந்த இளைஞனின் நண்பர்கள் அந்த வைத்தியரைத் தாக்கியுள்ளதுடன் வைத்தியசாலையிலிருந்த சொத்துக்களையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.