மன்னார் கரையோர பிரதேசத்தில் காணப்படுகின்ற இல்மனைட் அகழ்வு தொடர்பாக பொது அமைப்புக்கள் மற்றும் மாஸ் மினரல் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் உடன் பட்ட விடையமாக திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது, மக்களுக்கு திருப்திகரமாக விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் பொது மக்களின் அனுமதியுடனும், மக்களின் விருப்பத்துடனும் ,அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என இரு தரப்பினரும் உடன் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் கரையோர பிரதேசத்தில் காணப்படுகின்ற இல்மனைட் அகழ்வு தொடர்பாக அவசர கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை(26) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இல்மனைட் அகழ்வு சம்பந்தமான மாஸ் மினரல் நிறுவனத்தின் பிரதிநிதிகள்,திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், என அழைக்கப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் கரையோர பிரதேசத்தில் காணப்படுகின்ற இல்மனைட் அகழ்வு சம்மந்தமாக மாஸ் மினரல் நிறுவனத்தினால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.குறித்த விடயம் தொடர்பாக குறித்த நிறுவனத்தினர் புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிடம் பெற்றுக்கொண்ட அனுமதியுடன் தமது ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நடவடிக்கை தொடர்பாக மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புக்கள்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் மிகவும் ஆக்க பூர்வமானதாக இருந்தது.எதிர் காலத்தில் அவர்கள் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பாக வருகை தந்த பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தி,அவர்கள் குறித்த அறிக்கையை பெற்றுக் கொண்டதன் பின்னர் பொது அமைப்பினர் இங்குள்ளவர்களுடன் கலந்துரையாடி,குறித்த விடயம் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கும்,மாஸ் மினரல் நிறுவனத்திற்கும் வழங்குவது என்றும்,அதை வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் தீர்மானம் எடுப்பது என்றும்,இரு தரப்பும் உடன் பட்ட விடையமாக திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது மக்களுக்கு திருப்திகரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் பின்னர் பொது மக்களின் அனுமதியுடனும், மக்களின் விருப்பத்துடனும்,அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என இரு தரப்பினரும் உடன் பட்டுள்ளனர்.
இரு தரப்பினரின் அனுமதியுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் இங்கு கிடைக்கும் இலாபத்தில் கூடுதலான பங்கினை இப்பிரதேச மக்களும் அனுபவிக்க கூடிய வகையில் நன்மையை பெற்றுக் கொள்ளும் வகையில் அதனை பகிர்வதற்கும் இரு தரப்பினரும் உடன் பட்டுள்ளனர்.இவ்விடயங்களை கருத்தில் கொண்டு எதிர் காலத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு,திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்.
கரையோர மணல் அகழ்வு சம்பந்தமாக அரசாங்க அதிபரின் தலைமையில் மாஸ் மினரல் நிறுவனத்தினருடன் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை(26) நடாத்தப்பட்ட கூட்டத்தில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுப்பதற்கான பூகோளச் சூழல் சாத்தியமில்லை என்றும் அது விஞ்ஞான பூர்வமாக மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் நிறுவனங்களின் வளச் சுரண்டல்களை அனுமதிக்குமா? என்கிற கேள்வி இருக்கின்றமையினால் இவ்விடயம் தொடர்பாக நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.
அதற்கு பின்னர் குறித்த விடையங்கள் சம்பந்தமான ஆய்வு முன்னெடுக்கப்பட வேண்டும் என நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்.
அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் முக்கிய விடையங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.கணிய மணல் அகழ்விற்கு எதிராக மன்னார் மக்கள் பல வருடங்களாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற வேளையில் சில நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் மாஸ் மினரல் நிறுவனம் மும்முரமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இத்திட்டம் குறித்து நாங்கள் பொது மக்களோடும்,புத்திஜீவிகளும்,சமூகத்தலைவர்களோடும்,கலந்துரையாடி முடிவுகளை எடுத்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதாகவும்,புதிதாக வந்துள்ள அரசாங்கத்துடன்எமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நாங்கள் எடுக்கின்ற முடிவைஅறிவிப்போம் என அவர்களிடம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.