நாட்டில் கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இதன் விளைவாக பல பிரதேசங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் மழைநீர் தேங்கி வெள்ளநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சில பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது.
இந்நாட்டில் மழைக் காலநிலையுடன் சேர்த்து நுளம்பு பெருக்கம் ஏற்படுவது அண்மைக்காலமாக வழக்கமாகியுள்ளது. மழையுடன் சேர்த்து பெருக்கமடைவது பெரும்பாலும் டெங்கு வைரஸைக் காவிப் பரப்பும் நுளம்புகளாகவே இருக்கும்.
கடந்த காலங்களில் மழையுடன் சேர்த்து நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. அதற்கு டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்புகளின் பெருக்கமே காரணமாக அமைந்திருந்தது.
பொதுவாக டெங்கு நுளம்புகள் தெளிந்த மழைநீர் தேங்கும் இடங்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டுள்ளன. இந்நுளம்புகளின் பெருக்கத்திற்கு அதிக நீர் தேவைப்படாது. மாறாக சொற்பளவு நீர் போதுமானது.
அந்த வகையில் வீட்டுச் சூழலில் தேங்கிக் காணப்படும் பொலித்தீன் உறைகள், பொலித்தீன், கைவிடப்பட்ட சிரட்டை, டயர், யோக்கட் கப்கள், உடைந்த மட்பாண்டங்கள், கைவிடப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள் உட்பட மலர்ச்சாடிகள் போன்றவற்றில் மழைக் காலத்தில் மழைநீர் தேங்கலாம். அது டெங்கு நுளம்புகள் முட்டையிட்டுப் பல்கிப் பெருக வாய்ப்பாக அமையும். இந்நுளம்புகள் தான் டெங்கு வைரஸை காவிப் பரப்புகின்றன.
மனிதனுக்கு நேரடியாகத் தொற்றும் பண்பையோ சக்தியையோ டெங்கு வைரஸ் கொண்டதாக இல்லை. அவ்வைரஸ் மனிதனுக்குள் கடத்தப்படுவதற்கான ஒரு காவியாகவே நுளம்புகள் செயற்படுகின்றன. அதிலும் எல்லா நுளம்புகளும் டெங்கு வைரஸின் காவியாக செயற்படுவதில்லை. தமது காவியாக எல்லா இன நுளம்புகளையும் டெங்கு வைரஸ் எடுத்துக் கொள்வதுமில்லை. நுளம்புகளில் பல இனங்கள் உள்ளன. அவற்றில் ஈடிஸ் எஜிப்டைய் என்ற இன நுளம்புகளையே இவ்வைரஸ்கள் தம் காவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
இவ்வாறு காவிப்பரப்படும் இவ்வைரஸ் மனிதனுக்கு தொற்றியதும் பல நோய் அறிகுறிகள் வெளிப்படும். அவற்றில் கடுமையான காய்ச்சல், தீவிர தலைவலி, கண்களின் பின்புறத்தில் வலி, எழும்புகள் மற்றும் தசைகளில் வலி, மூட்டு வலி, குமட்டல், வாந்தி போன்றவானவை குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.
டெங்கு காய்ச்சல் ஆரம்பத்தில் சாதாரண நோய் நிலையைக் கொண்டிருந்தாலும் அது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் தற்போதைய சூழலில் இரண்டொரு நாட்களுக்கு மேல் கடும் காய்ச்சல் காணப்பட்டால் தகுதியான மருத்துவரை அணுகி மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக குருதிப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வதே சிறந்தது.
தற்போதைய சூழலில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்து கவனயீனமாகவும் அசிரத்தையுடனும் நடந்து கொண்டால் இக்காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுக்கான நோய்க்காரணி தீவிரமடைந்து டெங்கு குருதிப்பெருக்கு, டெங்கு அதிர்ச்சி நிலை போன்ற கட்டங்கள் கூட ஏற்படலாம்.
அதனால் டெங்கு வைரஸ் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. டெங்கு காய்ச்சலை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும் முடியும். இக்காய்ச்சலுக்கு உள்ளானால் உரிய சிகிச்சையை ஆரம்ப கட்டத்திலேயே பெற்றுக்கொள்ளும் போது நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ளலாம்.
இந்நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி முதல் இம்மாதம் 20 ஆம் திகதி வரையும் 35 ஆயிரத்து 756 பேர் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர், அதாவது 14 ஆயிரத்து 448 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அதிலும் 8 ஆயிரத்து 599 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்தோடு இம்மாதத்தில் மாத்திரம் 2,630 பேர் இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் காரணத்தினால் டெங்கு வைரஸைக் காவிப்பரப்பும் நுளம்பு முட்டையிட்டு பல்கிப் பெருக முடியாத படி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் நிமித்தம் சுற்றாடலில் மழைநீர் தேங்கக்கூடிய வகையில் தேங்கிக் கிடக்கும் திண்மக் கழிவுப் பொருட்களை முறையாகவும் தொடராகவும் அப்புறப்படுத்த வேண்டும். அப்போது டெங்கு வைரஸ் பரப்பப்பட வாய்ப்பு இராது.
அதேநேரம் காய்ச்சலுடன் கூடிய நோயறிகுறிகள் காணப்படுமாயின் கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளாது ஆரம்பத்திலேயே தகுதியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது இந்நோயை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு முற்றிலும் தவிர்த்துக்கொள்ளக்கூடியதே டெங்கு.