செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஆரம்பமானது.
45ஆவது தடவையாக நடைபெறும் இந்த போட்டிகளானது எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடக்கிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும், 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும், 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், சமநிலைக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
‘ஸ்விஸ்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.
உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்