லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஆட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண் ஒருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஆட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தை புதைப்பதற்காகவே ஆட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஆட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஆட்டோ சாரதியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.