தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது வரவேற்க தக்கது என்றாலும் அது தற்பொழுது காலம் கடந்து விட்டதால் தமிழர்களே தமக்கு புதை குழி தோண்டும் செயற்பாடாக இது அமையுமென வடமாகாண கடற்றொழில் இணையத்தின் யாழ் மாவட்ட தலைவரும்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளருமாகிய இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளரால் இன்று(8) எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
யுத்தம் முடிவுற்று முகாம்களில் தமிழர்கள் வதைபட்டுக் கொண்டிருந்த காலப் பகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்தி ஒற்றுமையாக செயற்பட்டு சர்வதேசத்திற்கு எமது பலத்தை காட்ட வேண்டிய தேவை இருந்தது
சிவாஜிலிங்கம் பொதுவேட்பாளருக்கான தேவையை பல தடவை வலியுறுத்தியும் யாரும் அதை ஏற்றுக் கொள்ளாததால் சிவாஜிலிங்கமே இறுதியில் பொது வேட்பாளராக நின்று வாக்கு கேட்டார்
சிவாஜிலிங்கம் பொது வேட்பாளராக நின்ற போது தற்போதைய பொது வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட அவரை ஒதுக்கி விட்டு யுத்தத்தை நடாத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை படு கொலை செய்த பொன்சேகாவை ஆதரித்தனர்
2019 ஆம் ஆண்டு கோத்தபாய ஜனாதிபதியாக களமிறக்கப்பட்ட போது கோட்டபாய வெற்றி பெறுவாரென தெரிந்தும் சஜீத்தை தமிழ் கட்சிகள் ஆதரித்தன.ஆனால் இலங்கை வரலாற்றில் அதி கூடிய வாக்குகளை பெற்று கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
அன்றைய சூழலில் எல்லாம் பொது வேட்பாளரை நிறுத்தாமல் திடீரென தற்பொழுது நிறுத்துவதற்கான நோக்கம் என்ன?
வடக்கு மாகாணத்தில் வாக்களிப்பற்கு தகுதி பெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து இருநூற்று எண்பது.ஒட்டு மொத்த இலங்கை தேர்தல் தொகுதிகளில் 25%-30% மக்கள் வாக்களிப்பதில்லை வடக்கு மாகாணத்தில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை தமிழ் பொது வேட்பாளர் பெறவில்லை என்று சொன்னால் அது தமிழினத்திற்கான படு தோல்வியாக கருதப்படும்.
75 வருடகால தமிழர்களுடைய உரிமை போராட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாக இந்த பொது வேட்பாளர் நாடகம் காணப்படுகின்றது
ஆனால் நான்கு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை தமிழ் பொது வேட்பாளர் வடக்கு மாகாணத்தில் பெற்வாராக இருந்தால் நிச்சயமாக அது தமிழ் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படும் ஆனால் ஒரு போதும் அது நடவாது
வடக்கு மாகாணத்தில் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கை ஓங்கியுள்ளது மன்னார்,இலுப்பைக்கடவை, தேவன் பிட்டி தொடக்கம் காரை நகர்,நெடுந்தீவு,வல்வெட்டித்துறை,காங்கேசன்துறை,சுண்டிக்குளம்வரை டக்ளஸ் தேவானந்தாவிற்கு கணிசமான வாக்குகள் உண்டு குறைந்தது வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வாக்குகளை அவர் பெறுவார்.
கிளிநொச்சி தொகுதியில் முருகேஷ் சந்திரகுமார், அதே போன்று யாழில் அங்கஜன்,விஜயகலா மகேஷ்வரன்,ஆகியோர்கள் கணிசமான வாக்குளை எடுப்பார்கள்.
அதே போன்று தேர்தலை புறக்கணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கிட்டத்தட்ட 65 ஆயிரம் வாக்குகளை கொண்டுள்ளது. இரண்டு இலட்சம் வாக்குகள் இல்லாமல் போகிறது.இந்த நிலையில் கணிசமான வாக்குகளை தமிழ் பொது வேட்பாளர் பெறாவிடில் அது மாபெரும் தோல்வி
அதே போன்று தேர்தலை புறக்கணிக்கும் தமிழ் தேசிய முன்னணியினரும் வடக்கு கிழக்கில் எழு இலட்சம் மக்கள் தேர்தலை புறக்கணிக்காவிடில் முன்னணியினரின் தோல்வியாக அல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் தோல்வியாகவே அது கருதப்படும்
மூன்று முறை சிங்கள வேட்பாளரை ஆதரித்து ஏமார்ந்து போனதால் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய பொதுக்கட்டமைப்பும் இந்த தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும்
பொது வேட்பாளராக நிறுத்தியிருக்க வேண்டியவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே
சிவாஜிலிங்கம் அன்று கூறியதைத்தான் இன்று நீங்கள் செய்கின்றீர்கள்
மூன்று முறை போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தை ஒதுக்கியது சரியா?
அவர் மீனவ சமுகத்தை சேர்ந்தவர் என்பதனாலையே சிவாஜிலிங்கம் ஒதுக்கப்பட்டார் தமிழ் தேசிய கட்சிகள் இடையே சாதி நிலைப்பாடு அதிகரித்துள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவினுடைய நிகழ்ச்சி நிரலை இவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.விடுதலை புலிகள் இலங்கை தீவில் நிலை கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் எந்த ஒரு அந்நிய நாடும் காலூன்றியது கிடையாது. விடுதலை புலிகள் இல்லாமல் போனதன் பிற்பாடு இன்று இலங்கை பல நாடுகளுக்கு அடிமை
இலங்கையில் சீனா கால் பதிப்பது இந்தியா தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக கருதி தான் விரும்பும் ஒருவரையே ஜனாதிபதியாக கொண்டுவர முயற்சிக்கிறது
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இந்தியா பலத்த முயற்சி மேற்கொள்கிறது. தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தாது போனால் தமிழ் மக்களுடைய வாக்குகள் சஜீத் பிரமேதாசவிற்கு சென்றால் அது ஆபத்தாக அமையும்
இதன் காரணமாகவே இந்தியாவால் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
புதிய இளம் தலைமுறையினரை அரசியல் களத்திற்குள் இறக்குவதன் மூலமே தமிழர்களுக்கான விடிவு அமையுமென்றும் தற்போதைய தமிழ் தலைமைகளால் ஒருபோதும் விடிவில்லை எனவும் தெரிவித்தார்