சமூக ஊடகங்களில் போலியான அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள் பரவுவதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பெஃப்ரல்) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதை அடுத்தே பெஃப்ரல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினுடையது என்று பொய்யாகக் கூறப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்த நிலையில், இந்த போலியான செய்தி தொடர்பில், கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணையகம் மற்றும் பொலிஸாரின் பொறுப்பு என்று பெஃப்ரல் கூறியுள்ளது.
இதுபோன்ற போலியான அறிக்கைகள் மூலம் பொதுமக்களின் கருத்தில் தேவையற்ற செல்வாக்குக்கு நிறைய இடங்கள் உள்ளன என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, இணைய குற்றப் பிரிவின் உதவியுடன், இந்த போலி அறிக்கைகளை உருவாக்குபவர்களின் பின்னணி தொடர்பில் கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெஃப்ரல் வலியுறுத்தியுள்ளது.