சிலாபம் – மயிலம்குளம் களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 4 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் சிலாபம் களப்பு பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 28 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த 28 உர மூடைகளில் இருந்து 843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளுடன், அமோனியம் காபனட் எனும் இரசாயன திரவ பொருள் 25 கிலோ கிராம் அடங்கிய மூடையொன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகளால் சந்தேக நபர்கள் பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை களப்பு பகுதிகளில் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மற்றும் 25 கிலோ கிராம் அடங்கிய அமோனியம் காபனட் இரசாயன பொருள் அடங்கிய உரமூடை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாய்கால கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.