நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய சிகிச்சை காரியாலயம் அமைந்துள்ள பிரதேசம் தற்போது பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாகவே இக்கட்டித்திடத்திற்கு பின்னால் இருக்கும் மலையில் இருந்து கற்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் இதனால் கட்டிடத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பும் இவ்வாறு கற்கள் சரிந்து விழுந்ததன் காரணமாக குறித்த காரியாலயத்தில் இருந்து தமது சேவைகளை தொடர்வதில் அச்சம் நிலவியதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமது பிரதேசத்தில் 90 ஆயிரம் மக்கள் இருப்பதோடு மாத்திரமல்லாது தமது நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 72 பாடசாலைகளைச் சேர்ந்த 14000 மாணவர்களும் 600 கர்ப்பிணித் தாய்மாரும் 3000க்கும் மேற்பட்ட 5 வயதிற்கு குறைந்த சிறுவர்களும் வாழ்ந்து வருவதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. ரேஷ்னி துரைராஜ் தெரிவித்தார்.
இவர்களுள் குறிப்பாக தமது சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு வாராந்தம் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்கள் வந்து செல்வதோடு மாத்திரமல்லாது பிரதேச மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாகவே இந்த கட்டிடம் விளங்குகிறது என பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இப்பிரதேசம் NBRO பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கையின் பிரகாரம் குறித்த இடத்தில் அனர்த்தம் இருப்பதன் காரணமாக உடனடியாக அவ்விடத்தை விட்டு பிரிதொரு இடத்திற்கு காரியாலயத்தை கொண்டு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அறிவித்திருந்தது.
அதற்கு அமைய இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பழைய கட்டிடம் மற்றும் லெம்லியர் தோட்ட Circuit bangalow ஆகிய கட்டிடங்களை தமக்கு பெற்றுத் தருமாறு இலங்கை மின்சார சபை மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும் குறித்த கட்டிடங்களில் ஒன்று கூட தமக்கு தமது சேவைகளை தொடர்ச்சியாக தடையின்றி கொண்டு செல்வதற்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து லிந்துலை பிரதேச வைத்திய சாலையின் ஒரு பகுதியில் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தற்காலிகமாக முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அனுமதி வழங்கியிருந்தார் இருப்பினும் பழைய கட்டிடத்திலேயே அலுவலக செயற்பாடுகள் இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறான சூழலில் கடந்த ஒரு தினங்களாக மீண்டும் கற்கள் சரிந்து வந்ததன் காரணமாக தமது சேவைகளை தொடர்ச்சியாக அங்கிருந்து முன்னெடுப்பதில் பாரிய அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்து இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் லிந்துலை பொது சுகாதார வைத்திய நிலையமமானது தற்காலிகமாக லிந்துலை பிரதேச வைத்திய சாலையில் தொடர்ச்சியாக இயங்குவதற்கான அனுமதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
குறித்த நிலையத்தை நிரந்தரமாக வேறொரு இடத்திற்கு துரித கதியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை குறித்து அதிகாரி முன்னெடுப்பதாகவும் அதுவரை தற்காலிகமாக மக்களுக்கான சேவைகளை பிரதேச வைத்தியசாலையில் இருந்து வழங்குமாறு அறிவித்துள்ளார்.
குறித்த பொது சுகாதார வைத்திய நிலையத்திற்கான கட்டிடம் நிரந்தரமாக கிடைக்கும் பட்சத்தில் அதனை முன் கொண்டு நடத்துவதற்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமாக அரசாங்கத்தினால் ஒரு தெகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
எனவே குறித்த நிலையத்திற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள லெம்லியர் தோட்ட தேயிலல தொழிற்சாலையை அல்லது வோல்ட் ரீம் தோட்ட முகாமையாளர் விடுதியை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.