ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவர் வென்றாலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையே மீண்டும் ஏற்படுமென, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் கடந்த இரு வருடங்களுக்குள் மாற்றம் இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தலில் எவரும் இன, மத பேதங்கள் பற்றி பேசவில்லை. ஒற்றுமையாக நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வது பற்றியே சிந்திக்கின்றனர். லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், ரிஷாட் பதியூதீனின் கட்சியும் அரசாங்கத்தில் இல்லாதிருப்பதே இதற்குக் காரணம். நாட்டில் தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியிருக்கின்றார்.
இதனை மாற்ற வேண்டுமா? அல்லது தொடர வேண்டுமா என்ற கேள்வியே தற்போது உள்ளது. ரணிலைத் தவிர வேறு எவர் வென்றாலும், நாட்டை கட்டியெழுப்புவது யார் என்ற பிரச்சினை மீண்டும் எழும்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. நானும், அதாவுல்லாவும் மட்டுமே சமூகத்தின் பாதுகாப்பு கருதி கோட்டாவின் அரசாங்கத்துடன் இணைந்து செய்யப்பட்டோம்.எங்களை சிலர் குறை சொன்னார்கள். நாம் அந்த அரசாங்கத்தில் இல்லாதிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அவர்கள் யோசிக்கவில்லை. பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்றும் எவரும் அப்போது தெரிவிக்கவில்லை.
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது எட்டுப் பேர் ஒன்று சேர்ந்து அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் என சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடினோம். இலங்கைக்கு அப்போது வருகை தந்த இம்ரான் கானுடனும் கலந்துரையாடினோம்.
மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அவர்களின் சமூகத்தைக் கட்டியெழுப்ப கல்வியமைச்சைக் கோருகிறார்கள்.
அந்த வகையில் அதாவுல்லா மக்களுக்கான பல சேவைகளை செய்திருக்கின்றார். அவருக்கு முஸ்லிம் மக்களின் மரியாதை உரித்தாக வேண்டும்.
அரபு நாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும் வரவேற்புள்ளது. பலஸ்தீனுக்காக குரல்கொடுக்கும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் இலங்கைக்கு இன்று உயர்வான இடமுள்ளது. ஐ.நாவிலும் பலஸ்தீனுக்காக நாம் குரல் கொடுத்திருக்கிறோம். இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை காசாவிற்கு வழங்கியது. காசாவில் பிரச்சினைகள் தீர்ந்த பின்னர், அங்கு பாடசாலை ஒன்றை அமைத்துக்கொடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.