பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (24) மாலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.
பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.
அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம் மக்கள் மத்தியில் தெளிவாக காரணங்களுடன் அறிவிப்போம். மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.
எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கே அவர்களாகவே புரியக்கூடியவகையில் அறிவிக்க கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன் அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.