இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய இலங்கை அணி முதல் இனிங்ஸில் 236 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 358 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் சதம் பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை தொடங்கியது. கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். சண்டிமால் மற்றும் மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடந்தனர். 89.2 ஓவர்களில் 326 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. 70 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. இருந்தும் அந்த அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் உறுதுணையாக ஆடினர். அதன் பலனாக 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டியது.
இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.