அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற க்ளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌடான பிரதேசத்தில் வைத்து 31 வயதான பட்டி ஆரம்பகே அஜித் ரோஹன என்பவர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளதுடன் அத்துருகிரிய பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பேருந்தில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற 29 வயதான வருண இந்திக்க சில்வாவும் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதனுடன், T-56 ரகத் துப்பாக்கி,120 தோட்டாக்கள் மற்றும் 9mm பிஸ்டல் தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
கடந்த மாதம் 08ம் திகதி அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப் பட்டிருந்த நிலையில் சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
பின் இச்சம்பவத்தை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்திருந்ததுடன்
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.