போர்த்துகேய காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது யூடியூப் கணக்கை ஆரம்பித்த 12 மணிநேரங்களில் 10 மில்லியன் பாவனையாளர்கள் அதனை பின்தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு குறுகிய நேரத்தில் 10 மில்லியன் பாவனையாளர்கள் ஒரு கணக்கை பின்தொடர்ந்துள்ளமை இதுவே முதல் தடவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் கணக்கை ‘யுர் கிறிஸ்டியானோ’ (UR.Cristiano) என்ற பெயரில் நேற்றையதினம் (21.08.2024) தொடங்கியிருந்தார்.
இந்த கணக்கில் ரெனால்டோ அவரது மெழுகு சிலையை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்ப்பது உள்ளிட்ட காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
குறித்த கணக்கின் மூலம், ரொனால்டோவை 90 நிமிடங்களில் 1 மில்லியன் பாவனையாளர்களும் 6 மணிநேரங்களில் 6 மில்லியன் பாவனையாளர்களும் 12 மணிநேரங்களில் 10 மில்லியன் பாவனையாளர்களும் பின்தொடர்ந்தனர்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை ஹாம்ஸ்டர் கொம்பட் (Hamster Combat) என்ற யூடியூப் கணக்கு பெற்றுள்ளது.
இந்த சாதனையை ஏற்படுத்த குறித்த கணக்கு 7 நாட்களை எடுத்துக்கொண்டது.
இதேவேளை, யூடியூப் கணக்கொன்றில் அதிக பின்தொடர்வோர்களை கொண்ட கணக்காக மிஸ்டர் பீஸ்ட்டின் (MrBeast) கணக்கு (311 மில்லியன்) உள்ளது. இதனையும் வெகு விரைவாக ரொனால்டோ முறியடிப்பார் என்றே தற்போது கூறப்படுகின்றது.