கனடாவில்(Canada) யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் மூலமாக வந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களான ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் நாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில் உள்ள மருத்துவமனைகள், ஜெப ஆலயங்கள் மற்றும் யூத மையங்கள் ஆகியவை இலக்குகளில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஒட்டாவா பொலிஸார் பல மருத்துவமனைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ராயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் விசாரணையை முன்னெடுத்து வருவதாக ஒட்டாவா படை தெரிவித்துள்ளது.
மேலும் கனடா முழுவதும் RCMP(Royal Canadian Mounted Police) விசாரணை நடத்தி வருகிறது.
ஒட்டாவாவில் உள்ள the Queensway Carleton மருத்துவமனைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது மற்றும் விரிவான தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதேபோல் ரொறன்ரோ பொலிஸாரும் கட்டிடத் தேடுதலில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினர்.
கனேடிய யூத சமூகங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதே மின்னஞ்சல்களின் நோக்கம் என CJAயின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இதுகுறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பதிவில், “கனடா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்கள் இன்று அச்சுறுத்தல்களால் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் நான் வெறுப்படைகிறேன். இது அப்பட்டமான யூத விரோதம்” என குறிப்பிட்டுள்ளார்.