5 வயது சிறுவன் தந்தையை கைது செய்ய சொல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய தலைமுறையில் குழந்தைகள் சிறு சேட்டை செய்தாலே பெற்றோர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தெல்லாம் அடித்து வளர்த்தனர். குழந்தைகளும் பெற்றோரின் அடிக்கு பயந்து நடுங்குவர்.
தற்போது அந்த நிலையெல்லாம் மாறி விட்டது. குழந்தைகளை சிறுது கண்டித்தாலே காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் அளவுக்கு காலம் மாறியுள்ளது.
இது போன்று ஒரு சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக்கனேர் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. அங்கு வந்த 5 வயது சிறுவன், சாலை அருகே செல்லக்கூடாது, ஆற்றுக்கு அருகே செல்லக்கூடாது என தினமும் தன் தந்தை திட்டுவதாகவும், அடிப்பதாகவும் தெரிவித்த சிறுவன், அதற்காக அவரை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்றும் கோபமாக கூறியுள்ளான்.
இதனை ஆர்வத்துடன் கேட்ட காவல் துறையினர், தந்தை அக்பால் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்து சிறுவனை அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில், அவன் புகார் அளிக்க வந்தபோது, அவரது தந்தை ஊரில் இல்லை என்றும், சாலை, ஆறு போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடாது என தனது குழந்தைக்கு வலியுறுத்தியதாக கூறியுள்ளார். சிறுவன் காவலரிடம் புகார் அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.