யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய தவராசா ரகுமாதேவா என்ற நபர் பணிக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்து நபர் நேற்று (18) காலை கூலி பணிக்காக சென்றிருந்த நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக 11 மணியளவில் வீடு திரும்பி உள்ளார்.
இதனையடுத்து அவர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் 12.15 மணியளவில் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு, வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த சேகுலாப்தின் முஹமட் காபில் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் (17) காலை நாகர்கோவில் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றுள்ளார்.
கடற்கரையிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம் கடலினுள் சென்று நூறு அடி ஆளத்தில், ஒட்சிசன் சிலிண்டர் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் 11 மணியளவில் கரையை வந்தடைந்துள்ளார்.
பின்னர் பிற்பகல் இரண்டு மணியளவில் மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பிற்பகல் 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.