(படங்கள் இணைப்பு)
வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று (10/08/2024) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் ஆறுதல் அமைப்பினரால் பயிற்றுவிக்கப்பட்ட 337 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதன்போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்துச் சிறப்பித்தார்.
இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,
“குழந்தைகளை உருவாக்குவது என்பது பாரிய ஒரு பணி. ஒரு சிற்பத்தை செதுக்குவதற்கும், குழந்தைகளை உருவாக்குவதற்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை. குழந்தை பிறந்தது முதல் 7 வயதுக்குள் தனக்கு தேவையான அத்தனை விடயங்களையும் கற்றுக் கொள்வதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, குழந்தைகளின் முக்கியமான காலப்பகுதியை நீங்கள் உங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் ஆற்றுகின்ற பணி மிக முக்கியமானது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்று, குடும்பச் சுமையையும் தாங்கிக் கொண்டு நீங்கள் ஒரு பாரிய பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
அதற்காக வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அத்தனை முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கௌரவத்துடன் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்கான மறுசீரமைப்புகளை கல்வி அமைச்சு தற்போது மேற்கொண்டு வருகிறது.
உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் பல தடவைகள் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். புதிய கல்வி சீர்திருத்தத்தில் முன் பள்ளிகளுக்கான செயற்பாடுகள் மற்றும் உங்களை சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
நாட்டின் பல்வேறு மறுமலர்ச்சி திட்டங்களுக்குள் கல்வி மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் “ஆறுதல்” நிறுவனத்தின் ஊடாக வடக்கு, கிழக்கில் சேவையாற்றக்கூடிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பாடநெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக அனுசரணை வழங்கும் ரோட்டரி நிறுவனத்திற்கும் அதேபோல இந்த செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் “ஆறுதல்” நிறுவனத்திற்கும் வடக்கு மாகாணம் சார்பில் எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார்.