ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை , வெறும் நான்கே நாள்களில் வென்றது இலங்கையணி.
இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் , இலங்கை அணிக்கும் எதிரான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி , கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணித் தலைவர் தனஞ்செய டி சில்வா, முதல் ஆப்கான் அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மட் ஷா மட்டுமே இலங்கையணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடித்தார். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் ஆப்கான் அணி 198 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கையணி சார்பில் பந்துவீசிய விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலளித்து ஆடிய இலங்கையணி, அஞ்சலோ மத்யூஸ், சந்திமால் ஆகியோரின் அபார சதங்களின் துணையால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 439 ஓட்டங்களைக் குவித்தது. அஞ்சலோ மத்யூஸ் 141 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 107 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் நவீட் ஸர்டான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ஆடிய ஆப்கான் , விக்கெட்டுகளை விழவிடாமல் பார்த்ததோடு இணைப்பாட்டங்களையும் வலுவாக்கத் தொடங்கியது. இதனால் இலங்கை அணிவீரர்கள் ஆப்கான் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியாமல் திணறினர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் ஆப்கானிஸ்தான் அணி 199 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டை மாத்திரமே பெற்றிருந்தது.
இன்று நான்காம் நாள் இலங்கை அணி தனது வியூகத்தை மாற்றியது. இதனால் முதலில் பலமான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான், பின்னர் மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இறுதியில் 296 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் அந்த அணி பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் இப்ராஹிம் ஸர்தான் 114 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றிருந்தார். இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றிக்கு வெறும் 56 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கைத் தொட்டு, போட்டியையும் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலுமாக மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜெயசூரிய தெரிவானார்.