முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்கள் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வருகைக்காக தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருக்கின்றார். தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்.
இந்நிலையில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அவர்களும் இன்றையதினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்துப் பேசினோம். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதி கூறியுள்ளார்.
சாந்தனின் தாயாரிடமிருந்து ஒரு கோரிக்கைக் கடிதத்தையும், எம் சார்பில் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் வழங்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். நாங்கள் நாளையதினம் அந்தக் கடிதங்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பிப்போம்.
சாந்தனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செய்வோம்- என்றார்.