ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் தற்போதைய உடல்நலக் குறைவை குறிப்பிட்டு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் மகிழ்ச்சியடையும் மனநிலையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஒருவரே இவ்வாறு சர்ச்சைக்குரிய பதிவிட்டுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குவுக்கு நியமிக்கப்பட்ட நடராஜா கமலாகரன் என்பவரே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்-
இது நாபாவின் சாபமல்ல
விதி வலியது…
பத்மநாபா- ராஜீவ் படுகொலையில் தன் திறமைகளை காட்டுவதாக நினைத்த சாந்தனுக்கு இப்போ கிட்னி சரியாக இயங்கவில்லையாம்.
பத்மநாபா என்னும் மகோன்னத மனிதனை ஏமாற்ற முனையும் போதே அவனது விதி எழுதப்பட்டு விட்டது.
அவர் ஆசை ஆசையாக போட்ட சோற்றுக்குள் விஷத்தை விதைத்த அந்தக் கொடூரனின் துயரம் நிறைந்த வாழ்க்கை வாழும் பலருக்கு நீதி சொல்லும் என்பதே என் நம்பிக்கை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதும், இலங்கையை சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.